கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஓன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும், ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரருமான ரஃபேல் நடால், ஜெர்மனியின் யானிக் ஹன்ஃப்மனை (Yannick Hanfman) எதிர்கொண்டார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இரண்டாம் சுற்றில் நடால், ஜோகோவிச்!
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீரர்களான ஸ்பெயினின் ரஃபேல் நடால், செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இதில், ஆதிக்கம் செலுத்திய நடால் 6-2, 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதைத் தொடர்ந்து, நாளை மறுநாள் நடைபெறவுள்ள இரண்டாம் சுற்றுப் போட்டியில் அவர், ஜெர்மனியை சேர்ந்த யானிக் மடேனை (Yannick Maden) சந்திக்கவுள்ளார்.
இதேபோல் நடைபெற்ற மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில், முதல்நிலை வீரரும் செர்பிய வீரருமான நோவாக் ஜோகோவிச், பொலாந்தின் ஹுபெர்ட் ஹுர்காஸ் உடன் (Hubert Hurkacz) மோதினர். இதில், சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, நாளை மறுநாள் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஸ்விட்சர்லாந்தின் ஹென்ரி லாக்சோனனை (Henri Laaksonen) எதிர்கொள்ள உள்ளார்.