ஈரோடு மாவட்டம், முழுவதும் கடந்த சில நாள்களாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என எவ்வித வேறுபாடுகளுமின்றி பரவலாக கரோனா தொற்று ஒரே சீராகப் பரவி வருகிறது.
கடந்த 10 நாள்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பெருந்துறை சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தற்போது நோய்ப்பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாவட்டம் முழுவதும் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் அரசு சேவை மையத்தில் ஆதார் கார்டு திருத்தம், குடும்ப அட்டைத் திருத்தம் உள்ளிட்ட ஆவணங்களின் திருத்தத்திற்கு ஒரே நாளில் பலர் வந்திருந்தனர்.
அப்போது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் சேவை மையத்திற்குள் நுழைந்து, விண்ணப்பத்திருந்த ஆவணங்களின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பியதால் சேவை மைய ஊழியர்கள் எந்த வேலையையும் செய்ய முடியாமல் கடும் தடுமாற்றத்திற்கு உள்ளாகினர்.