கோவை மாவட்டம் வால்பாறையில், கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல் சேவை அடிக்கடி தடைபடுகிறது. இதன் காரணமாக தொலைபேசி சேவையும், இன்டர்நெட் சேவையும் பாதிக்கப்படுகிறது. அதேபோல் ஏடிஎம், இணையவழி பணப் பரிவர்த்தனையும் பாதிக்கப்படுகிறது.
மேலும் தற்போது பள்ளி மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி நடைபெற்று வருவதால் முறையான இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனை கண்டித்து வால்பாறை வியாபாரிகள் கூட்டமைப்பு, தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்கள், பொதுமக்கள் வால்பாறை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, முறையான சேவையை வழங்க வலியுறுத்தியும் தொலைத்தொடர்பு அலுவலகத்திற்கு தகுந்த அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் சங்க தலைவர் சௌந்தரபாண்டியன், மக்களவை உறுப்பினர் ஜாஜு, தங்கும் விடுதி உரிமையாளர் சங்கம் பாபுஜி சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.