12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து இந்திய வீரர் ஷிகர் தவான் மூன்று வாரங்களுக்கு விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது, தனது இடதுகையின் கட்டை விரலில் காயம் ஏற்பட்ட போதிலும், காயத்தைப் பொருத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடிய அவர், சதம் விளாசி மிரட்டினார். இதனால், இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
தவான் இல்லாததாதல், அவருக்கு பதிலாக நான்காவது வரிசையில் களமிறங்கும் கே.எல்.ராகுல், அடுத்துவரும் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்குவார் என தெரிகிறது. இதனால், நான்காவது வரிசையில் யாரை களமிறக்குவது என்ற குழப்பம் தற்போது மீண்டும் தேர்வுக்குழுவினர் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போது அந்த குழப்பத்திற்கு விடைதரும் வீரர்கள் குறித்து பார்ப்போம்.
தினேஷ் கார்த்திக்:
இந்திய அணியில் தோனிக்கு கூடுதல் விக்கெட்கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். எந்த வரிசையில் களமிறங்கினாலும், ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப ஆடும் திறன் கொண்ட இவர்தான், நான்காவது வரிசைக்கு பொருத்தமான வீரர் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இங்கிலாந்தில் ஆடியுள்ள அனுபவம், சமீபகாலமாக இந்திய அணியின் மேட்ச் ஃபினிஷர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 டி விஜய் சங்கர்:
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என முப்பரிமானங்களில் (3 டைமென்ஷன்) இவர் செயல்படுவதால்தான், இவரை இந்திய அணியில் தேர்வு செய்தோம் என தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்திருந்தார். இங்கிலாந்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டால், விஜய் சங்கர் இந்திய அணியில் விளையாடுவார் என தெரிக்கப்பட்டிருந்தது.
தற்போது இங்கிலாந்தில் அதே வானிலையே நிலவுகிறது. இதனால், ஆடுகளம் இவரது பந்துவீச்சுக்கு நன்கு கைக்கொடுக்கும் என்பதால் 3டி விஜய் சங்கர் இந்திய அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ரிஷப் பந்த்:
உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வின் போது, பல்வேறு ஆலோசனைக்குப்பிறகே தேர்வுக்குழுவினர் ரிஷப் பந்தை கழட்டி விட்டு தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தார்கள். இதனால், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் வாகன் உள்ளிட்ட பல்வேறு வீரர்களும் அதிரச்சியடைந்தனர். எந்த பந்துவீச்சாளருக்கும் பயப்படாமல் அதிரடியாக விளையாடும் இவருக்கு வாயப்பு என்னும் கதவு திறக்கப்படுமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
அம்பதி ராயுடு:
இந்திய அணியில் நீண்ட நாட்களாக இருந்த நான்காவது வரிசை பிரச்னையை தன் தோளில் சுமந்தவர் அம்பதி ராயுடு. 2018ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த இவரது பேட்டிங், நடப்பு ஆண்டில் அதளபாதளத்துக்கு சென்றது.
தற்போது கே.எல்.ராகுல் தொடக்க வீரராக விளையாட உள்ளார். இதனால், மீண்டும் ஒருமுறை நான்காவது வரிசை பாரத்தை சுமக்க ராயுடுவிற்கு இந்திய தேர்வுக்குழு வாய்ப்பு வழங்குமா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.