திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கள்ளப்பாளையம் பகுதியை சார்ந்தவர் பிரபு. இவர் திருப்பூர் மாவட்டத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கேயம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது நிற்காமல் சென்ற லாரியை துரத்திச் சென்றபோது லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிவேகமாக பல பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நிற்காமல் சென்ற லாரியை துணிச்சலுடன் மடக்கி பிடிக்க முற்பட்டபோது அதே லாரி மோதி பரிதாபமாக இறந்த சம்பவம் காவலர்கள் உட்பட அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இறந்து போன காவலர் பிரபு வீட்டிற்க்கு நேரில் சென்ற கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும் அரசு கேபில் டிவி தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் காவலர் பிரபுவின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிரபுவின் உருவப்படத்திற்க்கு அமைச்சர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திசா மிட்டல் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின் தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 50 ஆயிரம் பணத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் காவலர் பிரபுவின் குடும்பத்தாரிடம் அளித்தார். காவலர்கள் வாகன சோதனையின்போது அதிவேகமாக வரும் வாகனங்களில் விபத்துக்குள்ளாகாமல் தவிர்க்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அறிவுரை கூறினார். அதன்பின் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், “காவலர் பிரபுவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையிலும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து இது போன்ற சிறப்பானவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதிக வேகத்தோடு வரும் வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு பணி செய்ய வேண்டும்” என்றார்.