திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் சிலர் நடப்பதாக ஜூன் 23ஆம் தேதி காவல் துறைக்குப் புகார் வந்துள்ளது.
அதன்பேரில் அங்கு சென்ற உதவி ஆய்வாளர் மாரிமுத்து உள்ளிட்ட காவல் துறையினர் இடையூறு செய்ததாகக் கூறப்படும் நபரை பிளாஸ்டிக் பைப்பால் காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். அதன் காணொலி காட்சி சமூக வலைதளத்தில் பரவியது.
மேலும், டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாகவும், அதைத் தட்டி கேட்பவர்களை காவல் துறையினரை வைத்து தாக்குதல் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
வழக்கை விசாரித்த உறுப்பினர், சம்பவம் தொடர்பாக மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.