திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் கரோனா ஆலோசனை மையம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் விழிப்புணர்வு குறித்த கையேட்டினை மாவட்ட ஆட்சியரிடம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் பெற்றுக்கொண்டார். இந்த ஆலோசனை மையத்தில் மருத்துவர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணிபுரிய உள்ளனர்.
கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்க மாவட்ட ஆட்சியர் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர் பணியாளர்களிடம் பேசுகையில், “திருநெல்வேலியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள மக்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அதில் தொற்று இல்லாதவர்களும் நடத்தப்பட வேண்டும்.
அவர்களில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் , சிறுநீரக பிரச்னை இருப்பவர்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் தினந்தோறும் குறிப்பிட வேண்டும். அதனடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு உரிய மருத்துவ ஆலோசனைகள் மற்றும் அவர்கள் எடுக்க வேண்டிய உணவுகள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.