தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஓ.பி.சி. மருத்துவ மாணவர்களுக்கு பழைய நடைமுறையே தொடர வேண்டும் - தமிழ்நாடு அரசு

சென்னை : தமிழ்நாட்டில் மத்திய அரசின் மருத்துவப் படிப்புகளில் பின்பற்றப்பட்டு வந்த ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

ஓ.பி.சி. மருத்துவ மாணவர்களுக்கு பழைய நடைமுறையே தொடர வேண்டும் - தமிழ்நாடு அரசு
ஓ.பி.சி. மருத்துவ மாணவர்களுக்கு பழைய நடைமுறையே தொடர வேண்டும் - தமிழ்நாடு அரசு

By

Published : Jul 9, 2020, 6:43 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடு, பட்டியல் பிரிவினருக்கு 15 விழுக்காடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு மற்றும் பொதுப்பிரிவினருக்கு 50.5 விழுக்காடு என்ற இட ஒதுக்கீட்டு முறையை எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.

ஆனால், அகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும் போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு முறையாக பின்பற்றுவதில்லை என்ற தகவல் தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றுமாறு கோரி, மத்திய அரசுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

பின் மேற்கண்ட கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து எவ்வித பதிலும் பெறப்படாததால், இக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி, மத்திய அரசுக்கு நிகழாண்டு ஜனவரி 13 அன்று தமிழ்நாடு அரசால் கடிதம் எழுதப்பட்டது.

அகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும் போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் சலோனி குமாரி மற்றும் ஒருவர் தொடர்ந்த வழக்கு (எண். 596 / 2015) நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் ஒரு மனுதாரராக தன்னை சேர்த்துக் கொண்டது.

இப்பொருள் தொடர்பாக கடந்த ஜூன் 6 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு அரசினால் ஒப்பளிக்கப்படும் இடங்களில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவதைப்போல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி (பிற்படுத்தப்பட்டோர் 30 விழுக்காடு மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 விழுக்காடு) உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு (வழக்கு எண்.552/2020 ) தொடரப்பட்டது.

இவ்வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜூன் 11 ஆம் தேதி நாளிட்ட தனது தீர்ப்பில் இக்கோரிக்கை தொடர்பாக மனுதாரர்களை உயர் நீதிமன்றத்தினை அணுகுமாறு அறிவுறுத்தியது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்திலும் தனியாக ஒரு வழக்கு (எண் 8361/2020) கடந்த ஜூன் 16 ஆம் தேதி தமிழ்நாடு அரசால் தொடரப்பட்டு, இன்று (ஜூலை 9) அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

தமிழ்நாடு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்திலும் 50 விழுக்காடு கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் தனியாக மீண்டும் ஒரு வழக்கினை (எண்.13644/2020) ஜூலை 2 ஆம் தேதி தொடர்ந்து, மேற்படி வழக்கும் இன்று (ஜூலை.9 ) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரைத் தொடர்ந்து, முதலமைச்சரும், ஏழை எளிய மாணவர்கள், குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்வி பயில்வதற்கு தடையாக இருக்கும் ‘நீட்’ தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நேற்றைக்கு கூட (ஜூலை 8) தமிழ்நாடு முதலமைச்சரால் , பாரத பிரதமருக்கு தற்போதுள்ள காலகட்டத்தில் ‘நீட்’ தேர்வினை நடத்ததுவது மிகவும் கடினம் என்றும், பிளஸ் 2 தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ கல்விக்குத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) மத்திய அரசு பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் சேர்க்கைக்கு மத்திய அரசு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது.

இந்த இட ஒதுக்கீடு வளமான பிரிவினருக்கு (Creamy layer) வழங்கப்படுவதில்லை. வளமான பிரிவினர் அளவு கோல்களில், பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு அளவு கோல். அதன் படி பெற்றோரின் ஆண்டு வருமானம் தற்போது 8 லட்சம் ரூபாய் உச்ச வரம்பாக உள்ளது.

இந்த வருமானத்தை கணக்கிடும் போது, இதுவரை ஊதியம் (salary) மற்றும் விவசாயம் (Agriculture) வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை (Exempted). தற்போது மத்திய அரசு, ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை வளமான பிரிவினரை நீக்கம் செய்வதற்கான கணக்கில் எடுத்துக் கொள்ளப்போவதாக செய்திகள் வந்துள்ளன.

தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையமும் இதனை பரிந்துரை செய்யும் என்ற செய்திகளும் வந்துள்ளன. தமிழ்நாட்டில் பல்லாண்டு காலமாக பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கென இடஒதுக்கீடு கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு பணிகளில் நியமனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கை ஆகியவற்றிற்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தி, சமூக நீதியை காப்பதில் தமிழ்நாடு அரசும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. மண்டல் குழு வழக்குகளில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு அரசு 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு (கல்வி நிலையங்களில் இடங்களையும், மாநில அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்கள் அல்லது இடங்களை ஒதுக்கீடு செய்தல்) சட்டத்தினை நிறைவேற்றியது.

பின்னர், அரசமைப்புச் சட்டத்தின் 31பி-ன்கீழ் பாதுகாப்பு பெறும் பொருட்டு, தமிழ்நாடு சட்டம் 45 /1994, இந்திய அரசமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது (Included in the 9th Schedule of the Constitution of India).

தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு முறையில், கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கை மற்றும் மாநில அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்கள் ஆகியவற்றில் வளமான பிரிவினரை (Creamy layer) நீக்கம் செய்யாமல், 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இட ஒதுக்கீடு சமூக, கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு குந்தகத்தை விளைவிக்கும் என கருதப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட சூழ்நிலையில் மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) வழங்கப்படும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில், வருமான உச்ச வரம்பில், ஊதியம் (Salary) மற்றும் விவசாய (Agriculture) வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தற்போது பின்பற்றப்பட்டு வரும் வளமான பிரிவினருக்கு உள்ள நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்று பாரத பிரதமரை முதலமைச்சர் கடிதம் வாயிலாக வலியுறுத்தி உள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு சமூக நீதியை காப்பதுடன் பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் நலனை காப்பதிலும் முன்னோடி அரசாக உள்ளது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர்.

தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை என்றென்றும் காக்கும் அரணாக விளங்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details