சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கலையரசி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ஜூன் 19ஆம் தேதி போரூரிலிருந்து மூத்த வழக்கறிஞர் அலுவலகத்திற்கு நான் பணிக்காக செல்லும் வழியில் காவல் துறையால் தடுக்கப்பட்டேன். இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்தது.
தற்போது கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டாலும் ஆன்லைன் வழியாக நீதிமன்றங்கள் செயல்பட்டுவரும் நிலையில், டெல்லி உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் நீதிமன்ற வழக்கு விசாரணை பணிகளுக்காக வழக்கறிஞர்கள் சென்று வர அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற மாநிலங்களில் அனுமதிக்கும்போது, சென்னையில் சொந்த அலுவலகங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
இதனால், நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யும் பணி பாதிக்கப்படுகிறது. ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்தாலும், கூடுதல் ஆவணங்களை உயர் நீதிமன்றத்தில் நேரடியாக வழங்கக்கோரி நீதிமன்ற அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வழக்கறிஞர்களை அலுவலக ரீதியாக அனுமதிக்க உத்தரவிடவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு இன்று (ஜூன் 26) விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக காவல்துறை விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை இரண்டாம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.