தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அரசு மருத்துவர்கள் அலட்சியம்: தாயும், சேயும் உயிரிழப்பு! - ராணிப்பேட்டையில் தாயும், பிறந்த குழந்தையும் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும், பிறந்த குழந்தையும் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Mother And Child Dead In Ranipet
Mother And Child Dead In Ranipet

By

Published : Sep 29, 2020, 12:46 AM IST

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி அர்ச்சனா, திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் அர்ச்சனா கருவுற்றிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (செப். 27) இரவு அர்ச்சனா பிரசவத்திற்காக ராணிப்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலை குழந்தை இறந்து பிறந்ததைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் அர்ச்சனாவும் உயிரிழந்தார்.

இதற்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய முறையில் சிகிச்சை அளிக்காததுதான் காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் காந்தி, உயிரிழந்த அர்ச்சனாவின் உடலை நேரில் பார்வையிட்டதோடு, அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

மருத்துவமனை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அர்ச்சனாவின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தாய், குழந்தையின் உடலை அங்கிருந்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்விற்காக கொண்டுசெல்ல காவல் துறையினர் முயற்சித்தனர்.

அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்த உறவினர்கள் சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் உடலை இங்கிருந்து கொண்டுசெல்வோம் எனக் கூறி ஆம்புலன்ஸ் வேனை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை காவல் துறையினர், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவர், செவிலியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதைத் தொடர்ந்து, உறவினர்கள் அங்கிருந்து தாய், குழந்தையின் சடலத்தை கொண்டுசென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details