தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

முதலமைச்சரை எச்சரித்த ஸ்டாலின்! - Stalin Slams tn government

சென்னை : ”கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக இதுவரை சொன்ன எந்த ஆலோசனைகளையும் கேட்கவோ செயல்படுத்தவோ முன்வராத, மக்களை மறந்த முதலமைச்சரை கடைசியாக எச்சரிக்கிறேன்” என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரை எச்சரித்த ஸ்டாலின்!
முதலமைச்சரை எச்சரித்த ஸ்டாலின்!

By

Published : Jun 28, 2020, 1:10 PM IST

இது குறித்து காணொலி மூலம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கரோனா நோய்ப் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழ்நாடு மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

இந்த கரோனா நோய்த் தொற்று ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே பரவிய தொடக்க நிலையில் இருந்து இன்று வரை மக்களின் பாதுகாப்பு கருதி, தமிழ்நாடு அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனைகளை நான் வழங்கி வருகிறேன். அதிமுக ஆட்சியில் இருந்தாலும் மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்கிற கடமை உணர்ச்சியுடன், அனைத்து ஆலோசனைகளையும் சொல்லி வந்தேன்.

ஊரடங்கு காலம் என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யவேண்டும் என்பதையும் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் இதில் எதையுமே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்கவுமில்லை, செய்யவுமில்லை.

இப்படி நடந்து கொண்டதால்தான் மாநிலத்தில் தினமும் 2000 - 2500 - 3000 - 3500 என்று கரோனா பாதிப்பு கூடிக்கொண்டே போகிறது. தினமும் 50 பேர் இறக்கிறார்கள்.

சமூகப் பரவல் ஆகிவிட்டது என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழில் மருத்துவ நிபுணர் ஜேக்கப் ஜான் பேட்டி அளித்துள்ளார். பல மருத்துவ நிபுணர்களும் சொல்கிறார்கள். ஆனால் சமூகப் பரவல் இல்லை என்று பிடிவாதமாக முதலமைச்சர் சொல்கிறார் . முதலமைச்சரின் முதிர்ச்சியின்மையினால்தான், தமிழ்நாடு மிக மோசமான பேரழிவை சந்திக்க வேண்டியதாயிற்று.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "கரோனாவைக் கட்டுப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதுவரை எந்த ஆக்கப்பூர்வமான ஆலோசனையையாவது அரசாங்கத்துக்கு சொல்லி இருக்கிறாரா?" என்று கேட்டிருக்கிறார்.

கரோனா நோய்த் தொற்று குறித்த செய்தி பரவியவுடனே, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் அதனால் சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னது யார்?

அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கேட்டது யார்? பரிசோதனைகளை அதிகரியுங்கள் என்று எச்சரித்தது யார்? ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவோருக்கு 5000 ரூபாய் நிதியுதவி கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தது யார்? கரோனா காலத்தில் மதுபானக் கடைகளைத் திறக்காதீர்கள் என்று சொன்னது யார்? இவ்வளவையும் சொன்னது நான் தான். ஆனால், ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார் என்று கேட்கிறாரே எடப்பாடி பழனிசாமி.

'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலமாக தொற்று ஏற்பட்டது என்று பழனிசாமி சொல்கிறார். இதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்? 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலமாக மக்களின் பசி குறைந்தது. பட்டினி ஓரளவு தணிந்தது. அதுகூட பழனிசாமிக்குப் பிடிக்கவில்லையா?

நோயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. முதலமைச்சர் பதவியை வைத்து மக்களுக்கு எதையும் செய்யத் தகுதி இல்லாதவர் பழனிசாமி என்பதைத்தான் நாட்டு மக்களுக்குத் தினமும் சொல்லிக்கொண்டு வருகிறேன்.

இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா ஆலோசனைகளையும் சொல்லிவிட்டேன். இப்போது அவருக்குச் சொல்வதற்கு ஒரே ஒரு ஆலோசனைதான் இருக்கிறது. கரோனாவை ஒழித்துவிட்டு அதற்கான சாதனைப் பட்டத்தைச் சூட்டிக் கொள்ளுங்கள். கரோனேவே ஒழியாத நிலையில், ஒழித்துவிட்டதாக பொய்யான மகுடம் சூட்டிக் கொள்ளாதீர்கள்! " எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details