பெருந்தொற்று நோயான கரோனா பரவல் காரணமாக ஒட்டுமொத்த நாடும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாட்டின் கல்வித் துறையும் முடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை 30 விழுக்காடு குறைப்பதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் செய்தி வெளியிட்டிருந்தார்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 9,10,11,12 ஆம் வகுப்புகளில் உள்ள அரசியல், அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள், சமூக இயக்கங்கள், மொழிப் போராட்ட வரலாறு, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, சாதி, மதம், பாலினம் மற்றும் ஜனநாயகத்திற்கு சவால்கள் பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பள்ளிக் கல்வியில் படித்து அறிந்துக்கொள்ளவேண்டிய அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களையும் மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளதை நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இயக்கங்கள், திரையுலகப் பிரபலங்கள் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தற்போது, சி.பி.எஸ்.இ. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் ஒன்பது, பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் தந்தை பெரியார் சிந்தனைகள், சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானத்தின் எல்லைப் போராட்ட வரலாறு ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.