திருப்பூர் மாநகராட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை24) கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், "திருப்பூர் மாநகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் தெரிவிக்கும் வகையில் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள்தோறும் 500 முதல் 1000 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் தற்போது கரோனா பரவி வருவதால் அவர்களை சுகாதார துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.