மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிகல் கிராமத்தில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழ்நாட்டில் இரண்டாயிரத்து 542 கிராமங்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக திட்டம் வகுக்கப்பட்டு, அதற்கான டெண்டர் இணையதள வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் கோரப்பட்டது. இந்தத் திட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாக குற்றம்சாட்டி, திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மக்களின் வளர்ச்சித் திட்டத்தைத் தடுப்பதே தனது கொள்கையாக அறப்போர் இயக்கம் கொண்டு இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. எந்த வளர்ச்சித் திட்டத்தை அரசு முன்னெடுத்து சென்றாலும் அதனை தடுப்பதற்கு செயற்கையான முறையை முன்னெடுக்கிறார்கள்.
கிராமங்களில் அதிவேக இணையதள வசதி கிடைக்கப் பெற்றுவிட்டால், தமிழ்நாடு முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள 62 லட்சம் மடிக்கணினிகள் அனைத்தும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இது பொருளாதாரத்தில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.
மத்திய அரசு மறு டெண்டர் கோருவதற்கு வழிகாட்டுதலைக் கொடுத்துள்ளது. சுயசார்பு இந்தியா உருவாக்குவதற்கு மத்திய அரசு ஒரு சிறந்த முயற்சியை எடுத்துள்ளது. மறு டெண்டர் இ-டெண்டர் முறையில் வெளிப்படைத் தன்மையோடு, தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு, இத்திட்டம் மிக விரைவில் தொடங்கப்படும்” என்று கூறினார்.