சர்வதேச அளவில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி, அடிப்படை உரிமை காக்கப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக ஜூலை 12ஆம் தேதி உலகளவில் மலாலா தினம் கொண்டாடப்படும் என 2013ஆம் ஆண்டில் ஐ.நா. சபை அறிவித்தது.
உலக அளவில் கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்கான விழிப்பு உணர்வை வலுப்படுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படும் அளவுக்கு அப்படி என்ன செய்தார் மலாலா?
அடிப்படைவாதிகளுக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையே அகிம்சை வழியில் அவர் பெண்களின் உரிமைக்காக போர்க்குரல் எழுப்பியது ஒன்றே போதாதா?!
உலகளவில் 6 கோடியே 10 லட்சம் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத அவல நிலையில் வாடும்போது, அதில் ஒருவராக இருந்த மலாலா அந்த நிலையில் இருந்து தானும் மீண்டு, மற்றவர்களையும் மீட்கும் வரலாற்று கடமையை செய்து வருகிறார்.
2003 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மத அடிப்படைவாத, பயங்கரவாத அமைப்பான தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் அவதியுற்று வந்தனர். குறிப்பாக, அவர்களின் ஆதிக்கத்தின் காரணமாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகளில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டனர்.
இதனால், 50 ஆயிரம் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். பெண்கள் கல்வி உரிமை முற்றும் முழுதாகப் பாதிக்கப்பட்டது.
இக்கொடுமைகளை எதிர்த்து 2009ஆம் ஆண்டில் தன் எழுத்தின் மூலம் தலிபான்களின் அட்டகாசங்களை உலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டியதே உலகிற்கு மலாலா யாரென காட்டியது.
அப்போது வெறும் 11 வயதேயான சிறுமி மலாலாவுக்கு எழுத்தின் மீது தீராத காதல் இருந்தது. அவற்றை தனது டைரிக் குறிப்பாக தொகுத்து வைத்திருக்கும் பழக்கமாக அவர் மாற்றியிருந்தார்.
சீருடை அணியாமல், சாதாரண உடை அணிந்து, புத்தகங்களை மறைத்துக் கொண்டு பள்ளிக் கூடம் சென்று வந்த மலாலாவின் ஒவ்வொரு எழுத்தும் தலிபான்கள் இழைத்துக்கொண்டிருக்கும் கொடுமைகளை ஆவணப்படுத்தி இருந்தது.
தனது தேசத்தில் நடக்கும் கொடுமைகளை சர்வதேசம் அறிய வேண்டுமென நினைத்த அவர், அதனை தொகுத்து 'நான் அச்சப்படுகிறேன்' என்ற தலைப்பில் கட்டுரைகளாக மாற்றி பி.பி.சி. உருது மொழிப் பிரிவுக்கு புனைப்பெயரில் அனுப்பி வைத்தார். அந்த கட்டுரைகளில் உள்ள எழுத்துக்களின் வீரியம் உணரப்பட்டதால், அவற்றை தொடராக வெளியிட்டது பி.பி.சி செய்தி நிறுவனம்.
இந்த ஆவணமே அடுத்த மூன்றாண்டுகளில் ஸ்வாட் பகுதியில் இருந்து தலிபான்கள் விரட்டி அடிக்கப்படுவதற்கு அடித்தளமாக மாறியது.
அதுவரை உலகிற்கு யாரென தெரியாத அந்தச் சிறுமியை 'நியூயார்க் டைம்ஸ்' ஆவணப் படம் வெளிப்படுத்தியது.
ஹிட்லரின் வெறிச் செயல்களைத் தனது டைரிக் குறிப்புகள் மூலம் வரலாற்றுப் பதிவாக்கிய ஜெர்மானிய சிறுமி ஆன்னி ஃபிராங்க்கின் மறுபிறப்பாக போற்றப்பட்ட மலாலாவின் முகத்தை முதன்முறையாக உலகமே பார்த்தது.
உண்மையில், இந்த சின்னஞ்சிறு சிறுமி தான் இந்தக் கட்டுரைகளை எழுதினாளா? என்ற வியப்பு ஒரு பக்கம், இனி அவளுக்கு வரப்போகும் ஆபத்துகள் குறித்து ஆழ்ந்த சிந்தனை இன்னொரு பக்கம் உலகத்திற்கு எழுந்தது.
மலாலா மீது அக்கறை கொண்டவர்கள் நினைத்ததுபோல, தலிபான்களின் 'எதிரியாக' அவர் காலத்தால் மாறியிருந்தார். மலாலாவை தங்களது 'குறி' வைப்பிற்குள் வைத்திருந்தது தலிபான் அமைப்பு.