கால்பந்து விளையாட்டில் பீலே, மரடோனா, ஜோஹன் குரைஃப், ரொனால்டினோ, டேவிட் பெக்காம் என எத்தனையோ ஜாம்பவான்களின் ஆட்டத்தை பார்த்திருப்போம், பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனியும் பார்ப்போம். ஆனால், இவர்களது மத்தியில் சுமார் 32 வருடங்களுக்கு முன்பு கால்பந்து விளையாட்டிற்கே வரப்பிரசாதம் போல் ஒரு குழந்தை அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் ஜுன் 24, 1987இல் பிறந்தது.
அந்த குழந்தை கால்பந்து விளையாட்டிற்கு பெருமையை சேர்த்தது மட்டுமில்லாமல், விளையாட்டை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. அவர் வேறு யாரும் இல்லை, லயோனல் மெஸ்ஸி எனும் மெஜிசியன்தான். மெஸ்ஸியை பற்றி தெரிந்திடாத விளையாட்டு ரசிகர்களே இருக்க மாட்டார்கள். அப்படி தெரியாத ரசிகர்கள் இவரை கூகுள் செய்து பார்த்தால் போதும்,
மெஸ்ஸியை சூழ்ந்துருக்கும் எதிரணி களத்தில் பந்து இவரது காலுக்கு வந்தால் போதும், ஏராளமான எதிரணி வீரர்கள் இவரை சூழ்ந்துக்கொண்டிருப்பார்கள் அவர்தான் மெஸ்ஸி. மெஸ்ஸியை டிஃபென்ட் செய்ய வேண்டுமானால், நீங்கள் கடவுளிடம்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என இத்தாலி நாட்டின் பிரபல டிஃபென்டர் செல்லினி கூறியிருப்பார்.
ஆம், மெஸ்ஸியிடம் இருந்து பந்தை வாங்குவது மிகவும் கடினமான விஷயம். பலமுறை மெஸ்ஸியை தடுக்க முயன்ற எதிரணி டிஃபெண்டர்கள் முட்டி மோதிக் கொள்ளும் காட்சிகள் தான் அரங்கேறும்.
மெஸ்ஸியை தடுக்க முயன்ற டிஃபெண்டர்கள் left footed player ஆன மெஸ்ஸி, களத்தில் எத்தனை வீரர்கள் வந்தாலும், அவர்களை ட்ரிபில் (dribble) செய்து கடினமான கோலையும் எளிதாக அடிப்பது அவரது காலுக்கு வந்த கலை. அதேசமயம், கூர்மையான பார்வை கொண்ட அவர், பந்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஸ் செய்வதிலும் கெட்டிக்காரர். கால்பந்து விளையாட்டை இந்த அளவிற்கு சிறப்பாக விளையாட முடியாமா என யோசித்து பார்க்க முடியாத அளவில் விளையாடுவார் அவர்.
அவர் ஒவ்வொரு முறையும், கோல் அடித்த உடன் வானத்தை நோக்கி இரு கைகளை தூக்கியவாறு செலிபிரேட் செய்வது குறித்தும், அவர் மெஜிசியனாக மாறியது குறித்தும் இப்போது பார்ப்போம். கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக கால்பந்தில் மெஸ்ஸி சிறந்த வீரராக திகழ்வதற்கும், ரசிகர்கள் அவரது பெயரை தினந்தோறும் முழங்கிக்கொண்டிருப்பதற்கும் மிக முக்கிய காரணம் அவரது பாட்டி செலியாதான்.
ஒருமுறை மெஸ்ஸியின் சகோதரர்கள், அவர்களது நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவதை மெஸ்ஸி வேடிக்கை பார்த்தார். அவர் தோற்றத்தில் குள்ளமாகவும், மற்றவர்களை விட சிறுவனாகவும் இருந்த காரணத்தால் அவரை ஆட்டத்தில் சேர்க்கவில்லை. இருப்பினும், மெஸ்ஸியை சேர்த்துக்கொள்ளுங்கள் என அவரது பாட்டி கூறினார்.
பின், மெஸ்ஸி ஒருமுறை கால்பந்து விளையாடுவதை பார்த்த அவரது பாட்டிக்கு, அவர் இயற்கையிலேயே கால்பந்து திறன் கொண்டவர் என்று தெரியவந்தது. இதனால், மெஸ்ஸிக்கு ஷூ வாங்கித் தரவேண்டும் என அவரது பாட்டி அவரது அம்மாவிடம் விடாப்படியாக சண்டை போட்டு வாங்கித் தந்தார்.
பிறகு, தனது சகோதரர் கால்பந்து போட்டியில் விளையாடும் ஆட்டத்தை பார்க்க மெஸ்ஸியை அவரது பாட்டி அழைத்துச் செல்வார். அப்போது, ஒருமுறை, ஆட்டத்தில் பங்கேற்க ஒரு சிறுவன் வரவில்லை. இதைத் தெரிந்துகொண்ட செலியா, மெஸ்ஸியை சேர்த்துக் கொள்ளுங்கள் என பயிற்சியாளரிடம் கேட்டுக்கொண்டார்.
ஆனால், மெஸ்ஸியின் உருவத்தைக் கண்டு முதலில் அவரை சேர்த்துக்கொள்ள பயிற்சியாளர் தயங்கினார். இருப்பினும், மற்ற வீரர்களைவிட மெஸ்ஸி நன்றாக ஆடுவார் என அவரது பாட்டி சொல்ல, பயிற்சியாளரும் அவரை அணியில் சேர்க்க சம்மதம் தெரிவித்தார். மெஸ்ஸி, களத்துக்கு செல்வதற்கு முன்னதாக, செலியா அவரிடம், ”எதிர்காலத்தில் நீ கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராக திகழ்வாய்” என தெரிவித்தார். இது, மெஸ்ஸியை பெரிதும் ஊக்கப்படுத்தியது.
சிறு வயதில் கோல் அடித்த மகிழ்ச்சியில் மெஸ்ஸி பின், ஃபார்வார்ட் பொசிஷனில் விளையாடிய மெஸ்ஸி, அந்த போட்டியில் நிகழ்த்தியதுதான் அவரது முதல் மேஜிக். பந்து அவரிடம் வந்தபோது, எதிரணி வீரர்கள் ( சிறுவர்களை) கடந்து மிக அசால்டாக கோல் அடித்ததைப் பார்த்து அவரது பயிற்சியாளர் திகைத்து போய் நின்றார்.
பின், உருவத்தின் காரணமாக மெஸ்ஸியை சேர்த்துக் கொள்ளமாட்டேன் என தெரிவித்த அதே பயிற்சியாளர், மெஸ்ஸியின் ஆட்டத்தைப் பார்த்து அணியில் உள்ள மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். பின் மெஸ்ஸி எட்டு வயதாக இருந்தபோது, நெவல்ஸ் ஓல்ட் பாய்ஸ் என்ற கிளப்பில் இணைந்தார். ஒவ்வொரு போட்டியிலும் அவர் குறைந்தது, ஆறு அல்லது ஏழு கோல்கள் அடித்து பிரமிக்க வைப்பார்.
நெவல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அணியில் மெஸ்ஸி ஆனால், மெஸ்ஸி எதிர்காலத்தில் (சர்வதேச அளவில்) தலைசிறந்த வீரர் என்பதை பார்ப்பதற்கு முன்னரே, மெஸ்ஸியின் பாட்டி அவர் 10 வயதை அடைந்தபோது உயிரிழந்தார். இந்த சம்பவம் மெஸ்ஸியை பெரிதும் பாதித்தது. இதில் இருந்து மீளமுடியாத மெஸ்ஸி ஒரு வாரத்திற்கும் மேல் கால்பந்து விளையாட செல்லவில்லை. இதை பார்த்த அவரது தந்தை, உன் பாட்டி , நீ தலைசிறந்த வீரராக திகழ்வாய் என கூறியதை மறந்துவிட்டாயா என நினைவூட்டினார்.
பின், மெஸ்ஸி மீண்டும் கால்பந்து விளையாட திரும்பினார். ஒருமுறை, பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் மெஸ்ஸியின் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதில், நீ கோல் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தால் உனக்கு பரிசாக சைக்கிள் வாங்கி தருவேன் என அவரது பயிற்சியாளர் தெரிவித்திருந்தார்.
ஆனால், எதிர்பாராவிதமாக அந்த போட்டி நடைபெற்ற சமயத்தில் மெஸ்ஸி தனது வீட்டின் பாத்ரூமில் மாட்டிக்கொண்டார். போட்டி தொடங்கியவுடன் மெஸ்ஸி எங்கே என தேடிய பின், அவர் இல்லாமல் விளையாடலாம் என அவரது பயிற்சியாளர் முடிவெடுத்தார். அதேசமயத்தில், பாத்ரூம் உள்ளே மாட்டிக் கொண்டதால் மனம் தளராத மெஸ்ஸி, ஜன்னலை உடைத்து அங்கிருந்து எப்படியோ மைதானத்துக்கு வந்து சேர்ந்தார். ஆனால், அவரது அணி அந்த போட்டியில் இரண்டு கோல் பின் தங்கிய நிலையில் இருந்தது.
அந்த தருணத்தில், சப்ஸ்டிட்யூட் வீரராக உள்ளே வந்த மெஸ்ஸி, தனது அசத்தலான ஆட்டத்தால் ஹாட்ரிக் கோல் அடித்து அணியை 3-2 என்ற கணக்கில் வெற்றிபெறச் செய்தார். பரிசாக சைக்கிளையும் பெற்றார்.
தொடர்ந்து, தனது அணிக்காக சிறப்பாக ஆடி வந்த மெஸ்ஸியின் புகழ் அர்ஜென்டினா எங்கும் பரவியது. அதேசயம், அவர் 13 வயதை எட்டியபோது அவரது விளையாட்டுக்குத் தடை போடும் வகையில் செய்தி ஒன்று வந்தது. ஹார்மோன் குறைபாட்டால் மெஸ்ஸி வளர்வது மிகவும் கடினம், இதை சரி செய்ய பணம் அதிகம் செலவாகும் என மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
அப்போது மெஸ்ஸியின் மருத்துவ செலவை யாரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஆனால், இந்த குறைபாடு ஒன்றும் அவரது வளர்ச்சிக்குத் தடையாகவும் இல்லை. ஏனெனில் டீன் ஏஜ் பருவத்திலேயே மெஸ்ஸியின் திறன் பற்றித் தெரிந்துகொண்ட, ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து கிளப் அணி, இவரது மெடிக்கல் செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளதித்து.
இதனால், 2000ஆம் ஆண்டில் மெஸ்ஸி பார்சிலோனாவுக்கு சென்று, அங்கு லா மாஸியா எனப்படும் பார்சிலோனாவின் ஜூனியர் டிவிஷன் அணியில் இணைந்தார். பிறகு தனது திறமையால், படிப்படியாக முன்னேறிய மெஸ்ஸி, 2004-05 சீசனின் போது, எஸ்பான்யோல் அணிக்கு எதிராக பார்சிலோனா அணிக்காக அறிமுகமானார்.
பிறகு மே 1, 2005இல் பார்சிலோனா அணிக்காக தனது முதல் கோலை பதிவு செய்து அசத்தினார். இயற்கையிலே திறன் கொண்ட வீரர்கள் ஒவ்வொரு முறையும் களத்தில் சர்ப்ரைஸ் செய்வது வழக்கம்தான். அதுபோல, மெஸ்ஸியும் பார்சிலோனா, அர்ஜென்டினா என இரண்டு அணிகளுக்கும் சிறப்பாக ஆடி இதுவரை 600க்கும் மேற்பட்ட கோல்களை பதிவு செய்து தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார்.
அவர் ஒவ்வொரு முறையும் கோல் அடித்தவுடன் அதை செலபிரேட் செய்யும் விதமாக தனது இரு கைகளையும் வானத்தை நோக்கி காட்டுகிறார். தான் இந்த அளவிற்கு கால்பந்தில் கோலோச்சி நிற்பதற்கு காரணமே தனது பாட்டி என்பதை மெஸ்ஸி ஒருபோதும் மறக்கவில்லை.
இதனால்தான் அவர் ஒவ்வொரு முறையும் கோல் அடித்தவுடன் அதை தனது பாட்டிக்கு டெடிகெட் செய்யும் விதமாக தனது இரு கைகளையும் வானத்தை நோக்கி காட்டுகிறேன் என மெஸ்ஸியே ஒருமுறை தெரிவித்திருக்கிறார். அதுவரை அவர் ஏன் இதுபோன்ற செலிபிரேஷனில் ஈடுபடுகிறார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது.
கால்பந்து விளையாட்டில் 14 வருடங்களுக்கும் மேலாக மேஜிக் செய்து ஐந்து கோல்டன் பூட், பலூன் டி ஆர் போன்ற பல்வேறு விருதுகளை வென்று அசத்தி வரும் மெஸ்ஸிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். முக்கியமாக மெஸ்ஸி என்ற மாயக்காரனை உருவாக்கி கால்பந்து உலகிற்கு அறிமுகப்படுத்திய அவரது பாட்டி செலியாவுக்கு நன்றி.