உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி பிர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முகமது ஆமிர், ஷஹீன் அப்ரிடி ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ஷஹீன் அப்ரிடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய கப்தில் (5), முன்றோ (12), டெய்லர் (3), டாம் லதாம் (1) என வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். இதனால், நியூசிலாந்து அணி 12.3 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இந்த தருணத்தில், ஜேம்ஸ் நீஷம் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் மீண்டும் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சர்ஃப்ராஸ் அஹமதிடம் கேட்ச் தந்து அவுட் ஆன வில்லியம்சன் இருப்பினும், 27ஆவது ஓவரின் போது அவர் ஷதாப் கானின் பந்துவீச்சில் 41 ரன்களோடு நடையைக் கட்ட, நியூசிலாந்து அணி 83 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து மீண்டும் தடுமாறியது. வில்லியம்சன் அவுட் ஆனாலும், நாங்க இருக்கிறோம் என, நியூசிலாந்து ரசிகர்களுக்கு நீஷம், டி கிராண்ட்ஹோம் நம்பிக்கை தந்தனர். மிரட்டலான பாகிஸ்தான் பந்துவீச்சை இவர்கள், எந்த ஒரு பயமுமின்றி சிறப்பாக எதிர்கொண்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இந்த ஜோடி 132 ரன்களை சேர்த்திருந்த நிலையில், கிராண்ட்ஹோம் 64 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இருப்பினும், மறுமுனையில், நீஷம் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். இதனால், நியூசிலாந்து அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்களை எடுத்தது. இப்போட்டியில் 112 பந்துகளை எதிர்கொண்ட நீஷம் ஐந்து பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 97 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷஹீன் அப்ரிடி மூன்று, ஷதாப் கான், முகமது ஆமிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.