தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: சீனாவை ஓரம்கட்டி இந்தியா முதலிடம்! - மனு பாக்கர்

ஜெர்மனி நாட்டின் முனிச்சில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில் இந்தியா ஐந்து தங்கப்பதக்கங்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: சீனாவை ஓரம்கட்டி இந்தியா முதலிடம்!

By

Published : Jun 1, 2019, 7:09 PM IST

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் சங்கம் சார்பில்(ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர் ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்றது. இதில், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான போட்டி நேற்று நடைபெற்றது.

இதில், இந்தியாவின் அன்ஜும் மொட்கில் - திவ்யான்ஷ்சிங் பன்வார் ஜோடி 16-2 என்ற புள்ளிகள் கணக்கில் சக வீரர்களான அபூர்வி சந்தேலா - தீபக் குமாரை வீழ்த்தி தங்கம் வென்றது. இதில், தோல்வி அடைந்த அபூர்வி சந்தேலா - தீபக் குமார் ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

இதேபோல, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் மனு பாக்கர் - சவுரப் சவுத்ரி ஜோடி 17-9 என்ற கணக்கில் உக்ரைன் நாட்டின் ஒலேனா - ஓலே மெல்சுக் ஜோடியை தோற்கடித்து தங்கம் வென்றது. இதன் மூலம், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு மனு பாக்கர் தகுதிபெற்றார்.

முன்னதாக, இந்தத் தொடரில் இந்திய நட்சத்திரங்களான சவுரப் சவுத்ரி, அபூர்வி சந்தேலா, சர்நோபட் ரஹி ஆகியோர் தங்கம் வென்றனர். இதன் மூலம், இந்தியா இந்தத் தொடரில் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் ஆறு பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது.

இந்தியாவுக்கு அடுத்தப்படியாக சீனா இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் என 9 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், ஒரு தங்கம், ஒரு வெள்ளி என இரண்டு பதக்கங்களுடன் ரஷ்யா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details