உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. சவுதாம்டன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் ஓன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிபட்சமாக கிறிஸ் மோரிஸ் 42, டுப்ளஸிஸ் 38 ரன்கள் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சாஹல் நான்கு விக்கெட்டுகள், பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 228 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் - 8, கேப்டன் கோலி - 18 என சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினர். இதையடுத்து, கே.எல்.ராகுல் உடன் ஜோடி சேர்ந்த ரோகித் ஷர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவ்விரு வீரர்களும் மூன்றாவது விக்கெட்டுக்கு 85 ரன்களை சேர்த்த நிலையில், கே.எல்.ராகுல் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து, ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த தோனி, தன் பங்கிற்கு இரண்டு பவுண்டரிகளை விளாசினார். இதனிடையே, ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து துல்லியமாக ஆடி வந்த ஹிட்மேன் என்றழைக்கப்படும் ரோகித் ஷர்மா 41ஆவது ஓவரில் தனது 23ஆவது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை பூர்த்தி செய்தார்.
சதம் விளாசி கெத்துக் காட்டிய ரோகித் ஷர்மா இதையடுத்து இந்திய அணியின் வெற்றி கடைசி நான்கு ஓவர்களில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி 34 ரன்களில் மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, வந்த ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். இதனால், இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை எடுத்து எளிதாக வென்றது. இதன் மூலம், இந்திய அணி இப்போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இப்போட்டியில் 144 பந்துகளில் 13 பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 122 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த ரோகித் ஷர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். மறுபக்கம் தென்னாப்பிரிக்க அணி இந்தத் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால், அடுத்த வரும் ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.