கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52ஆவது லீக் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியின் மூலம், பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
போட்டி முடிந்த பின், பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் தோல்விகுறித்து பேசுகையில்,
"கடந்த ஐபிஎல் சீசனில் கெயில், கே.எல்.ராகுல் இருவரும் பவர் பிளே ஓவரில் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தனர். ஆனால், இம்முறை அவர்கள் பவர் பிளே ஓவர்களில் அணிக்கு நல்லத் தொடக்கத்தை தரவில்லை. அவர்கள் மீது இருத்த எதிர்பார்ப்புதான் இதற்கு முக்கிய காரணம். இதைத்தவிர, பேட்டிங்கின் போது, பவர் பிளே ஓவரில் அதிக விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.
அதேபோல, பந்துவீச்சிலும் ஆன்ட்ரூ டை கடந்த சீசனில் சிறப்பாக பந்துவீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், இம்முறை அவரது பந்துவீச்சை, பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் விளையாடினர். இந்தத் தொடரில் இருந்து அவர் பல்வேறு பாடங்களை கற்றுக்கொண்டார்" என்றார்.
கடந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் கேப் பெற்ற ஆன்ட்ரூ டை, இந்த சீசனில் ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். இதைத்தொடர்ந்து, பஞ்சாப் அணி தனது கடைசி லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளது.