உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட பரவலை அடையும் நிலையில் அதன் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் பரவல் அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் முன்னெடுத்து வருகின்றன.
குறிப்பாக, எல்லையோர மாவட்டமான தருமபுரியில் தொற்று பரவும் அபாயம் அதிகமாக இருப்பதால் அம்மாவட்ட நிர்வாகம், நடமாடும் பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி மிகத் தீவிரமாக தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.