மதுரை அருகே ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் தற்காலிகமாக அமையவுள்ள கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”மதுரையில் நாளை அமல்படுத்தப்படவுள்ள தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் மதுரை மாநகராட்சி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று காய்ச்சல் கண்டறியும் பணியில் ஏறக்குறைய 2 ஆயிரத்து 500 களப்பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். இவர்கள் தாங்கள் செல்லும் வீடுகளில் கரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.
கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், மதுரை அரசு இராசாசி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகள் என அனைத்திலும் தற்போது கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் கடந்த சில நாள்களாக ஏற்பட்ட மரணங்கள் குறித்து சிலர் தேவையற்ற வகையில் பீதியைக் கிளப்பிவருகின்றனர். இது மிகத் தவறானதாகும். உயிரிழந்தோர் குறித்து மருத்துவப் பரிசோதனை அறிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்களின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்பதை அனைவராலும் அறிந்துகொள்ள முடியும். இதுகுறித்து சமூக வலைதளங்களிலோ அல்லது பிற வகையிலோ எவரேனும் வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.