கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கான இயந்திரத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இதன் மதிப்பு ரூ.2 கோடியே 12 லட்சம் ஆகும். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, பாரத் பெட்ரோலியம் சார்பில் மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரம் மாநகராட்சிக்கு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கரோனா வைரஸ் தொற்று குறித்தும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களைக் கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்ட கோவை கேர் ஆப் ( KOVAI CARE APP) என்ற செயலியையும் தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, " மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் வேலைக்கான தடுப்புச் சட்டத்தை அரசு சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. அதன் வெற்றியாக ஒரு ரோபோட் இயந்திரமானது மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.
கோவையில் இதுவரை 80 ஆயிரத்து 623 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்ததில், ஆயிரத்து 597 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், முழுவதும் பல பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. தற்பொழுது கோவை மாவட்டத்தில் வைரஸ் தொற்று அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது.