17ஆவது மக்களைவத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக 200 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், அவர்கள் ஆட்சியை தக்க வைக்கும் சூழல் நிலவியுள்ளது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் முதல்முறையாக போட்டியிட்டார்.
இதில், அவர் 6 லட்சத்து 21 ஆயிரத்து 605 வாக்குகள் பெற்றார். அவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அர்விந்தர் சிங் 2 லட்சத்து 84 ஆயிரத்து 856 வாக்குகளும், ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 16 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இதனால், கவுதம் கம்பீர் 3 லட்சத்து 36 ஆயிரத்து 749 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளார். கிரிக்கெட்டில் சாதித்ததைப்போலவே தற்போது அரசியலிலும் வெற்றிபெற்று கெத்துக் காட்டிய கம்பீருக்கு பாஜக தொண்டர்கள் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர்.