இது தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் செல்லையா வெளியிட்டுள்ள அறிக்கையில், " கரோனா பெருந்தொற்றிலிருந்து மாணவர்களை காப்பாற்ற அனைத்து ஆசிரியர் சங்கங்களும் அரசியல் கட்சிகளும் தொடர் கோரிக்கை வைக்கப்பட்டது. நடைபெற இருந்த ஜூன் 2020 பத்தாம் வகுப்பு மற்றும் விடுபட்ட பதினோராம் வகுப்பு தேர்வினை தமிழ்நாடு அரசு ரத்து செய்து ஆணையிட்டதை தமிழ்நாடு மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் என்பது அவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களையும் வருகைப்பதிவையும் வைத்து தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பு பல்வேறு முறைகேடுகள் நடைபெற வழிவகுக்கலாம் என்று பரவலாக சந்தேகம் எழுந்தது.
பல தனியார் பள்ளிகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்தும் பருவத் தேர்வுகளை நடத்தாமல் அவர்களே கேள்வித் தாள் தயாரித்தோ அல்லது பிற பயிற்சி நிறுவனங்கள் தயாரிக்கும் வினாத்தாள்களை கொண்டோ நடத்துகிறார்கள் என்றும், ஒரு சில பள்ளிகள் இதை வியாபாரமாக்கி பணம் பெற்றுக் கொண்டு அதிக மதிப்பெண்களை வழங்குகிறார்கள் என்றும் அப்போது அனைத்து ஊடகங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டது.