தேனி மாவட்டம் சின்னமனூரில் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நேற்று (ஜூலை 10) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், வேளாண்மை துணை இயக்குநர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சின்னமனூர் நகராட்சி ஆணையாளர், காவல் ஆய்வாளர் மற்றும் சுகாதாரத் துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், “சின்னமனூர் நகராட்சி பகுதியில் கரோனா நோய்த் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. எனவே இன்று (ஜூலை 11) முதல் வரும் ஜூலை 27ஆம் தேதி வரையில் 17 நாட்களுக்கு அனைத்து கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
நகராட்சி பகுதியில் மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் விற்பனை நிலையம், ஏடிஎம் தவிர்த்து காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள், வங்கிகள், அனைத்து வணிக நிறுவனங்கள் திறப்பதற்கு அனுமதி மறுக்கபடுவதாக முடிவெடுக்கப்பட்டது.
மேலும் பொதுமக்களின் அத்தியாவசியப் பொருள்களை நேரடியாக இல்லத்திற்கு விநியோகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு வணிகர்கள் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர். எனவே முகக்கவசம் அணியாமலும், தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள், கடைகள் திறப்பவர்கள் மீது நகராட்சி, காவல்துறையினர், அபராதம், 2005ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: மு.க. ஸ்டாலின் மீதான உரிமை மீறல் நோட்டீஸ்; ஆகஸ்ட் 12 இறுதி விசாரணை!