தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்றில்லாமல் தக்க ஆதாரத்துடன் பேசுங்க ஸ்டாலின்!'

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுக்கூட்ட மேடைகளில் தவறாமல் சொல்லுகிற, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல குற்றச்சாட்டுகளைக் கூறாமல் தக்க ஆதாரத்துடன் பேச வேண்டும் என மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டி ஜெயக்குமார்
டி ஜெயக்குமார்

By

Published : Jun 25, 2020, 6:49 AM IST

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் அமைச்சர்கள் தலைமையிலும் பல்வேறு உயர்மட்ட அலுவலர்கள் தலைமையிலும் சிறப்புக் குழுக்களை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்துவருகின்றார்.

ஏதோ ஒரு பத்திரிகையில் வெளியிடப்பட்ட பொய் செய்தியை திருவாளர் துண்டுச்சீட்டு உண்மை என நம்பிக்கொண்டு, அவர்கள் எடுத்த வதந்தி வாந்தியை இவரும் தன் வாயால் கொப்பளித்து துப்பியிருக்கிறார். இதே பத்திரிக்கைதான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை கருவின் குற்றம் என்று கவிதையெல்லாம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தனது தந்தையையே தரமில்லாமல் விமர்சித்த நாளிதழில் வந்த பொய்ச் செய்தியை உரசிப்பார்த்து, அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ளாமல் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவதூறு அறிக்கையை தன் பெயரில் மறுபிரசுரம் செய்திருக்கிறார்.

தெர்மல் ஸ்கேனர் ஒவ்வொன்றையும் ரூ.9,175 கொண்டு வாங்கியிருப்பதாக எம்.ஆர்.பி. விலையை பார்த்துவிட்டு மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்த மு.க. ஸ்டாலின் உண்மையாக அரசு என்ன விலை கொடுத்து வாங்கி இருக்கும் என்பதனை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் “எனக்குத் தெரியாது என்று தனக்கு முன்னால் இருப்பவர் எழுதிய விடையை பார்த்து தனக்கு தெரியாது என்று எழுதினாராம் ஒரு காப்பியடி திலகம்”. அதுபோலவே ஒரு நாளிதழின் பொய்ச் செய்தியை நம்பி மு.க. ஸ்டாலின் ரூ.9,175 மதிப்பிற்கு தெர்மல் ஸ்கேனர்களை வாங்கியதாக சென்னை மாநகராட்சியின் மீது அவதூறாகப் பழி போட்டிருக்கிறார். உண்மையில் தெர்மல் ஸ்கேனரானது ரூ.1,765 + 18 ரூபாய் ஜிஎஸ்டி வரி விதிப்புடன் மட்டும் வாங்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வீடுகள்தோறும் சென்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற கரோனா தீநுண்மி தொற்றுக்கான அறிகுறிகள் பொதுமக்களிடையே உள்ளனவா எனக் கண்டறிய 12 ஆயிரம் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, நாள்தோறும் அவர்களின் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று இது தொடர்பான கணக்கெடுப்பு தொடர்ந்து மூன்று மாதங்களாக நடைபெற்றுவருகின்றன.

இப்பணிகளை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பொதுமக்களின் உடல் வெப்பநிலையை கண்டறிய மாநகராட்சியால் முடிவுசெய்யப்பட்டு, சுமார் பத்தாயிரம் தெர்மல் ஸ்கேனர்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தங்களுடைய அறிக்கையில் தெர்மல் ஸ்கேனர் கருவியின் அதிகபட்ச விலை ரூ.9,175 எனவும், மொத்தமாக கொள்முதல் செய்தால் ரூ.4,000 முதல் ரூ.6,000 என்ற அளவில் வாங்க முடியும் எனவும், மேலும் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையில் தரமான தெர்மல் ஸ்கேனர்கள் தமிழ்நாட்டிலேயே கிடைக்கின்றன எனவும், இணையம் வாயிலாக ரூ.1,500 முதல் ரூ.4,000 வரை தெர்மல் ஸ்கேனர்கள் பல மருத்துவமனைகளில் வாங்கி பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளீர்கள்.

ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த விலைகளைவிட குறைவான விலையில் அதாவது ரூ.1,765 + 18 ரூபாய் ஜிஎஸ்டி வரி விதிப்புடன் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அறிக்கை வெளியிட்ட தங்களுக்கும், அறிக்கையை தயார் செய்து கொடுத்தவருக்கும் துளி அளவும் அடிப்படை அறிவு இல்லை என்பது தெளிவாகிறது.

பொதுக்கூட்ட மேடைகளில் தவறாமல் சொல்லுகிற, ‘’வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல குற்றச்சாட்டுகளைக் கூறாமல்" தக்க ஆதாரத்துடன் பேச வேண்டும். அப்படி ஆதாரம் இருக்கும் என்று நம்பினால், இன்றே என் பதவியினை முழு மனதுடன் ராஜிநாமா செய்ய தயாராக இருக்கிறேன். இன்றே மு.க. ஸ்டாலினும் ராஜிநாமா செய்ய வேண்டும். நிரூபிக்க ஸ்டாலினால் முடியவில்லை என்றால், அவர் திமுக தலைவர், எதிர்கட்சித் தலைவர் பதவிகளைத் துறந்துவிட்டு அரசியலை விட்டே ஒதுங்கிப் போக வேண்டும்.

நிரூபித்தால், மீன்வளத் துறை அமைச்சராகிய நான் அமைச்சர் பொறுப்பு உள்பட அனைத்து அரசியல் பதவிகளை துறந்து, அரசியலை விட்டே விலகத் தயார்.

இந்த தெர்மல் ஸ்கேனர் வாங்கிய ஒருவாரக் காலத்தில் தினமும் 10 லட்சம் வீடுகளுக்கு சென்று பொதுமக்களிடையே கணக்கீடு எடுக்கப்பட்டு, அதில், இதுவரை (1 வாரத்தில்) 1.5 லட்சம் மக்கள் உடற்சூட்டை சற்று அதிகமாக இருந்த நிலையில் அவர்கள் காய்ச்சல் மருத்துவ முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதிலிருந்து, 49,638 பேருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் 8,302 நபர்களுக்கு மேல் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருந்ததையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே சகுனியாகவோ அல்லது சாத்தானாகவோ எதிர்க்கட்சித் தலைவர் இடம் பெற வேண்டாம் என்ற ஒரு நல்ல எண்ணத்தில், இனிமேலாவது அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இப்படிப்பட்ட ஒரு மருத்துவ பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு பணியாற்றிட முன்வர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details