திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே உள்ள ஐயனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி தனலட்சுமி(35). இவர்களுக்கு அபிநயா(12), மாதேஷ்(8) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஐயப்பன் தச்சு வேலை செய்து வருகிறார். இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த வீடு கட்டினர். இதற்காக தனியார் வங்கி, மற்றும் சிலரிடம் கடன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி, கரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஐயப்பன் வேலை இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் அன்றாட செலவுகளுக்கே பரிதவித்து வந்த நிலையில், வாங்கிய கடனை மாதந்தோறும் செலுத்த முடியவில்லை. பணம் கொடுத்தவர்களின் நெருக்கடியைச் சமாளிக்க முடியாத நிலையில் மன அழுத்தத்திலிருந்த ஐயப்பனின் மனைவி தனலட்சுமி வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தற்போது ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு 80 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பேரளம் காவல் துறையினர் தனலட்சுமியிடம் வாக்குமூலம் வாங்கினர். அதில் தனியார் நிதி நிறுவனத்திடம் வாங்கிய கடன் உள்ளிட்ட தனியாரிடம் பெற்ற கடன் தொகையைக் கேட்டு, நெருக்கடி செய்ததால், மனம் உடைந்து தீக்குளித்ததாக தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் அனைத்துத் தரப்பினரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.