சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மணி என்கிற மாரிமுத்து. இவர் வீட்டின் அருகே கடந் 16ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு வானொலிப் பெட்டி கிடந்துள்ளது. இதைப்பார்த்த மணி அதனை எடுத்து வீட்டில் வைத்திருந்தார்.
எஃப்.எம். ரேடியோ வெடித்து விவசாயி இறந்த வழக்கு: அண்ணனே கொலைசெய்தது அம்பலம்! - அண்ணனே வெடிவைத்து கொலை செய்தது அம்பலம்
சேலம்: எஃப்.எம். ரேடியோ பெட்டி வெடித்து விவசாயி உயிரிழந்த வழக்கில் நிலத் தகராறு காரணமாக அண்ணனே வெடிவைத்து கொலைசெய்தது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த நாள் புதன்கிழமை மாலை 4 மணி அளவில் வானொலிப் பெட்டியை எடுத்து மின் இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்தார். அப்போது திடீரென அந்த வானொலிப் பெட்டி வெடித்துச் சிதறியது. இதில் பலத்த காயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அருகிலிருந்த 12 வயது சிறுமி சௌமியா, வசந்தகுமார், நடேசன் உள்ளிட்ட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். காயமுற்ற மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .
இது தொடர்பாக பனமரத்துப்பட்டி காவல் துறையினர் வெடித்துச் சிதறிய பொருள் என்ன என்பது குறித்து தடவியல் வல்லுநர்கள், வெடிகுண்டு வல்லுநர்கள் மூலம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், உயிரிழந்த விவசாயி மணிக்கும் அவருடைய மூத்த சகோதரர் செங்கோடனுக்கும் நீண்ட நாள்களாக வழித்தடத் தகராறு இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த வழித்தடத் தகராறு காரணமாக மணியை கொலைசெய்ய திட்டமிட்ட செங்கோடன் வானொலியில் வெடிக்கும் ஜெலட்டின் தோட்டாக்களைப் பயன்படுத்தி மின்சார இணைப்பு கொடுத்தால் வெடிக்கும்வகையில் தயார்செய்து அதை மணியின் வீட்டருகே வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்தே இச்சம்பவம் நிகழ்ந்தது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நேற்று (ஜூன் 25) செய்தியாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிகர் பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "இந்தக் கொலை வழக்கை தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டேன். அதன்படி காவல் துறை அலுவலர்கள் சிறப்பாகச் செயல்பட்டு மிகக் குறுகிய காலத்திலேயே கொலைக்கான காரணத்தையும் கொலையாளியையும் கண்டுபிடித்து கைதுசெய்துள்ளனர். அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்புகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தி இருக்கிறோம்" என்றார்.