நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடி பகுதியில் உள்ள விசைத்தறிக்கூடத்தில் தங்கிப் பணிபுரிந்து வரும் பெண்கள், அவரது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், 'தங்களது விசைத்தறிக் கூடத்தின் உரிமையாளர் செல்வம் என்பவர் விசைத்தறிக்கூட வளாகத்தில் வசித்து வரும் பெண் தொழிலாளிடம் பாலியல் தொந்தரவு செய்து, தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார். எனவே, தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மேலும், அப்பகுதியில் இருந்து தங்களது குடும்பங்கள் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஜூன் 9ஆம் தேதியன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர்.
இப்புகார் தொடர்பாக திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி விசாரணை மேற்கொண்ட திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தரக்குறைவாக பேசுவதாகவும்; விசாரணையை சரிவர நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறி; பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் இன்று (ஜூன் 11) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுவிடம் திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் மீது புகார் அளித்தனர்.
மேலும் பாலியல் தொந்தரவு குறித்த புகாரை திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளர் விசாரித்தால், நியாயமாக இருக்காது. வேறு அலுவலரை வைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.