தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடத்தப்படும். வருவாய்த் துறையினரால் அனைத்து கிராமம், வட்டம் தோறும் நடத்தப்படும் இந்த தீர்வாயத்தில், வேளாண்நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்களை விவசாயிகள் கூடுதலாக கேட்டுப் பெறலாம்.
மேலும் தங்கள் பகுதியில் உள்ள குறைகளைத் தீர்க்கவும், கல்வி, குடிநீர், நீர்ப்பாசன வாய்க்கால், மயான வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட தேவைகள் குறித்தும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகப் பெறப்படும் புகார்கள் குறித்தும் உடனடி தீர்வு காணப்படும்.
இந்நிலையில் கரோனா நோய்ப் பரவல் காரணமாக, இந்தாண்டு நடைபெறவிருந்த ஜமாபந்தி கூட்டம் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்க, தடை செய்யப்பட்டு, இணையதளம் வாயிலாகப் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "1429ஆம் பசலி (2019 - 20) ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நடத்தி மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றுக்கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் மனுக்களை வருகின்ற ஜூன் 29ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை இ-சேவை மையங்களின் மூலமாகவோ அல்லது http://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதளத்திலோ விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி தேனி மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட நாள்களில் இ-சேவை மையத்திலோ அல்லது http://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதளத்தில் நேரடியாகவோ, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு ஜமாபந்தி மனு எனக் குறிப்பிட்டு பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இதற்காக ஒவ்வொரு வட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் பின்வருமாறு: வட்ட வருவாய் தீர்வாய அலுவலர்கள், தேனி மாவட்ட ஆட்சியர், தேனி -உத்தமபாளையம் மாவட்ட வருவாய் அலுவலர், தேனி-பெரியகுளம் துணை மாவட்ட ஆட்சியர், பெரியகுளம்-ஆண்டிபட்டி தனித்துணை ஆட்சியர், (ச.பா.தி), தேனி-போடி - வருவாய் கோட்டாட்சியர் ( பொ) உத்தமபாளையம்.
இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு தீர்வு வழங்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.