கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றின் தீவிரத்தைத் தடுக்க, மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு ஜூன் 16 முதல் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் கூறியுள்ளார்.
மேலும்,பொது இடங்கள், பணிபுரியும் இடங்களில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இனையடுத்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தற்போது கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்துவருவதால் பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்துவதற்காக முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களிடம் ஜூன் 16 முதல் 200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும்.
மேலும், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பினைப் பயன்படுத்திக் கை கழுவுவதையும், முகக்கவசம் அணிந்து செல்வதையும், தகுந்த இடைவெளியைத் தவறாது கடைப்பிடிக்கவும், அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ஜூன் 15ஆம் தேதிவரை முகக்கவசம் அணியாத 16 ஆயிரத்து 624 நபர்களிடம் 16 லட்சத்து 52 ஆயிரத்து 200 இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை 100 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.