திண்டுக்கல் மாவட்டம், ஜோசப் காலனியைச் சேர்ந்தவர் மோகன் (55). இவரது மனைவி விஜயா (51). ஆட்டோ ஓட்டுநரான மோகன், வங்கி அல்லாத நிதி நிறுவனமான 'கிராம விடியல்' தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ளார். கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது ஊரடங்கால் வருமானம் இழந்த மோகனிடம், நிதி நிறுவன ஊழியர்கள் கடனை செலுத்தும்படி நிர்பந்தித்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான கணவன், மனைவி இருவருமே விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை மேற்கொண்ட விசாரணையில் கடன் தொல்லையே காரணம் என்பது உறுதியடைந்திருப்பது மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் உத்தரவுகளை மதிக்காமல் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் தொகையை வசூலிப்பதுதான்.
இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா அச்சத்தைவிட கடனை வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் தான் மக்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. தம்பதியின் இறப்பினால் வெளிச்சம் பெற்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் அத்துமீறல்கள் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் முன்னெடுத்த விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதில், சுய உதவி குழுக்கள், ’மைக்ரோ பைனான்ஸ்’ எனக் கூறும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூலம் பெற்ற கடனை அடைக்கக்கோரி அவமதித்ததால், பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்ததும் தெரிய வந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் வேலையின்றித் தவித்து வரும் அடித்தட்டு மக்களிடம் கடன் வழங்கிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், கடனை திரும்ப செலுத்தக்கோரி, நிர்பந்தித்ததால் சென்ற வாரம் 'போதும்பொண்ணு' என்ற பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மனநலம் குன்றிய குழந்தையுடன் காலணி கடையில் பணிபுரியும் போதும்பொண்ணுவிற்கு ஊரடங்கினால் வருமானம் இல்லை. இருப்பினும், வாங்கிய கடன் தொகையை சேர்த்து செலுத்துவதாக தெரிவித்தும் அதை ஏற்க மறுத்த நிதி நிறுவனத்தினர் தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகித்து வீதியில் நின்று திட்டியுள்ளனர்.
அவர் பணிபுரியும் இடத்திற்கும் சென்று, கடனைக் கட்ட வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர். "தொடர் அவமானங்களினால் உயிர் வாழ்ந்து என்ன பயன் என மனம் நொந்து, கண்ணீரால் கரைசேர்க்க முடியாத கவலையோடு தற்கொலைக்கு முயற்சித்தேன். ஒருவேளை நான் இறந்திருந்தால் எனது மூன்று குழந்தைகளுக்கு யார் பாதுகாப்பு அளிப்பார்கள்.
இந்த சமூகம் காசு உள்ளவருக்கு ஒரு மாதிரியும், காசில்லாதவரை ஒருமாதிரியும் நடத்துகிறது. காசில்லாதவனை கடவுள் கூட எட்டிப் பார்ப்பதில்லை என்ற நிலை தான் உள்ளது. இவ்வளவு நடந்தும், என் வீட்டிற்கு வந்த அலுவலர்கள் விரைவில் பணத்தை கட்ட வலியுறுத்தி சென்றுள்ளனர்" என வேதனையுடன் தெரிவிக்கிறார், போதும்பொண்ணு.