இந்தியா - சீனா இடையிலான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சீனத் தரப்பிலும் பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும், இது தொடர்பாக அந்நாட்டு அரசு இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.
ஜூன் ஆறாம் தேதி இருநாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், இரு நாட்டு ராணுவத்திங்களும், மோதல் ஏற்படும் பகுதிகளில் இருந்து பின்வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருந்தன. இந்நிலையில் தற்போது திடீரென ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
”கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மௌனம் காக்கும் பிரதமரை கண்டு வியக்கிறேன்” என பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து ட்விட் செய்துள்ள அவர்,
“இந்திய எல்லையில் நடைபெறும் தாக்குதல்கள் குறித்து பிரதமர் இன்னும் மௌனம் காப்பது ஏன்? ஏன் இன்னும் ஒளிந்துக் கொண்டிருக்கிறார்? நாட்டு மக்களுக்கு எல்லைப் பகுதியில் என்ன நடக்கிறது என்பது தெரிய வேண்டும். நமது நாட்டு நிலத்தை கையகப்படுத்தவும், நமது நாட்டு ராணுவ வீரர்களை கொல்லவும் எவ்வாறு சீனாவிற்கு தைரியம் வந்தது? அனைத்து விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பும் பிரதமர், இந்த அத்து மீறல் தாக்குதல் குறித்து மௌனம் காப்பது வியப்பாக இருக்கிறது” எனக் கடுமையாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மேலும், இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவண் கேரா தனது டிவிட்டர் பக்கத்தில், “எல்லையில் நிலவும் சூழல் குறித்து இந்தத் துயர்மிகு தேசத்தின் மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி விரிவாக விளக்க வேண்டும். தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்க உடனடியாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :கால்வான் பள்ளத்தாக்கிற்கு காஷ்மீரி பெயர் வந்தது எப்படி?