கரோனா தொற்றால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலவரம் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி இரண்டாவது நாளாக இன்று (ஜூன் 17) காணொலி அழைப்பின் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். காணொலி அழைப்பின்போது லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள முதலமைச்சர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
அப்போது எல்லையில் இந்திய ராணுவம் செய்த உயிர்த்தியாகம் வீண் போகாது என்றும்; வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழ்நாட்டில் மேற்கொண்டுவரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து, பிரதமர் இடத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
அப்போது பிரதமருடன் பேசிய முதலமைச்சர், 'ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஏப்ரல் மாதத்தில் 2.01 கோடி அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்பட்டது. 17 அமைப்புசாரா துறைகளில் 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. 13.35 லட்சம் உடல் ரீதியான சவால் உள்ளவர்களுக்கு, அவர்களின் மாத பராமரிப்புத் தொகைக்கு கூடுதலாக 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2.56 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் காலக்கெடுவின்படி, 261 ரயில்களில் கிட்டத்தட்ட 3.85 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்புவதை உறுதிசெய்துள்ளோம், மேலும் முழு செலவையும் மாநில அரசு ஏற்கிறது. வந்தே பாரத், சமுத்ரா சேது தூதரகங்களின் கீழ் 11,024 பயணிகளைப் பெற்றுள்ளோம். அவர்கள் அனைவரும் எஸ்ஓபி படி சோதனை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கரோனா தொற்று தொடர்பான மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மூலதன மானியம், வட்டி விலக்குதல் உள்ளிட்ட சிறப்பு ஊக்கப் பொதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.