தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஆர்.எஸ்.பாரதியின் பிணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு! - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Challenging dmk RS bharathi bail granted order, HC reserved order.
Challenging dmk RS bharathi bail granted order, HC reserved order.

By

Published : Jun 19, 2020, 2:52 PM IST

பிப்ரவரி மாதம் நடந்த "கலைஞர் வாசகர் வட்டம்" என்ற கருத்தரங்கில், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ். பாரதிக்கு நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியது. இந்த பிணையை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அம்மனுவில், "கடும் நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் அமர்வு நீதிமன்றம் பிணை வழங்கி உள்ளது. தொற்று நோய் பரவலை காரணம் காட்டி பிணை வழங்க முடியாது. கரோனா வைரஸ் காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக ஆர்.எஸ். பாரதி கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை" என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விவகாரங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பி விசாரணையை தள்ளிவைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்.எஸ். பாரதி தனது பேச்சை மறுத்தால் அதை நிரூபிக்க அவரது குரல் மாதிரியை எடுக்க வேண்டும். அதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் பிணையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

ஆர்.எஸ். பாரதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிணை மனு மீதான விசாரணையின் போது அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டன. அவரது பிணையை ரத்து செய்ய அரசு தரப்பில் எந்த காரணமும் இல்லை. விரோத போக்குடன் மாநில அரசு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது. ஆர்.எஸ். பாரதி பேசியது சி.டி. ஆதாரமாக உள்ளது என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சதீஷ்குமார், "யார் வேண்டுமானாலும் நீதிபதிகள் ஆகிவிடலாம் என்பது போன்ற ஆர்.எஸ். பாரதியின் பேச்சு உள்ளது. அதனால், தனிப்பட்ட முறையில் இதுபோன்ற விமர்சனங்கள் பேசுவதை ஆர்.எஸ். பாரதி தவிர்க்க வேண்டும். மேலும், தலைவர்களின் இதுபோன்ற பேச்சு நீதிமன்றங்கள் குறித்து மக்கள் மனதில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.

ஆர்.எஸ். பாரதியின் பிணையை ரத்து செய்யக்கோரிய காவல் துறையினரின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்துவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details