கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தன.
தேர்வைத் தள்ளி வைக்கக் கோரிய வழக்குகள் - முடித்து வைத்த உயர் நீதிமன்றம்
சென்னை: தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் தேர்வை தள்ளிவைக்கக் கோரிய அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தொற்றுப் பரவல் குறையாததால், தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்கக்கோரி, தமிழ்நாடு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்க நிர்வாகி மாரியப்பன், ஈரோட்டைச் சேர்ந்த மாணவியின் தந்தை மாரசாமி, கடலூரைச் சேர்ந்த இளங்கீரன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் பக்தவச்சலம் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இதில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில், ஒன்பது லட்சம் மாணவர்கள், இரண்டு லட்சம் ஆசிரியர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், தேர்வை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்படி கூறி, விசாரணையை இன்றைக்கு (ஜூன் 11) தள்ளிவைத்திருந்தது.
இந்நிலையில் இன்று (ஜூன் 11), பத்தாம் வகுப்புத் தேர்வை தள்ளிவைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து தமிழ்நாடு அரசு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. எனவே, பத்தாம் வகுப்புத் தேர்வை தள்ளிவைக்கக் கோரிய அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.