இது தொடர்பாக பி.எம்.ஜே என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நோயாளிகளின் இறப்பிற்கு, பாலினம், உடல் பருமன், இதய, நுரையீரல், கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள் உள்ளிட்டவைகளும் காரணிகளாக இருந்திருப்பது தெரிய வந்ததுள்ளது.
சீனாவைக் காட்டிலும் இங்கிலாந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனால், வேல்ஸ், ஸ்காட்லாந்து பகுதிகளில் உள்ள 208 மருத்துவமனைகளில் பிப்ரவரி ஆறாம் தேதி முதல் ஏப்ரல் 18ஆம் தேதிவரை அனுமதிக்கப்பட்ட 20 ஆயிரத்து 133 நோயாளிகளின் தரவுகளை இங்கிலாந்து ஆய்வாளர்கள் குழு ஒன்று ஆய்வு செய்தது.
இதில், கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளில், மூன்றில் ஒரு பகுதி நோயாளிகளின் சராசரி வயது 73 என்பது தெரியவந்தது. மேலும் பெண்களை விட (8,065 பேர்) அதிகமான ஆண்கள் (12,068 பேர்) மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வயது காரணியைத் தவிர இதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்க்கு அதிகமானோர் உள்ளாகியிருந்ததே இறப்புக்கான முக்கியக் காரணிகள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.