புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்பகுதிகளில் பொதுமக்கள் தகந்த இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறுகையில், “கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் போர்கால அடிப்படையில் மாவட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் கரோனா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியை பின்பற்றி அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவைகளை வாங்கி செல்ல தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் புதுக்கோட்டை நகரின் முக்கிய பகுதியான கீழ ராஜ வீதியில் பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் ஆகியவை பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக வங்கியின் முகப்பில் வெப்பமாணி கொண்டு வாடிக்கையாளர்களை பரிசோதித்த பின் உள்ளே அனுமதித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு தனிவரிசை முறையை பின்பற்றவும், குளிர்சாதன பயன்பாட்டினை முற்றிலும் நீக்கிடவும் அறிவுறுத்தப்பட்டது.
இதே போன்று பழங்கள் மற்றும் பழச்சாறுகள் விற்பனை செய்யும் கடைகளில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. பொது மக்கள் பழங்களை தங்களது கைகளால் தொடாதவாறு அவர்கள் தெரிவிக்கும் பொருள்களை கடை விற்பனையாளர்களே வாடிக்கையாளர்கள் எடுத்து வரும் பைகளில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடைகளில் பணிபுரிபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் காலையில் கடையில் நுழைவதற்கு முன் வெப்பமாணி கொண்டு சோதித்த பின்னரே பணி செய்ய அனுமதி வேண்டும் என்பது குறித்தும் கண்டிப்பாக பணியாளர்கள் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.