இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் ஓர் அங்கமான கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் அருகே சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. கடலூர் மாவட்டத்தின் வளமான பகுதிகளை பாலைவனமாக்கக் கூடிய இந்தத் திட்டத்தை உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தத் துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையை அடுத்த பெரியப்பட்டு உள்ளிட்ட அதன் சுற்றுப்புற கிராமங்களில் 304 ஏக்கர் பரப்பளளவில் ஜவுளி பூங்கா என்ற பெயரில் கடந்த 2004ஆம் ஆண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதன் உண்மையான நோக்கம் கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கொண்டு வந்து, தண்ணீரைக் கலந்து கடலில் விடுவது தான். இத்திட்டத்தின் உண்மையான பின்னணியை தெரிந்து கொண்டதால் தான் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இத்திட்டத்திற்கு எதிராக அப்பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.