உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சர்வதேச நாடுகள் பலவும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்நிலையில், கிர்கிஸ்தான் நாட்டில் படித்துவரும் 700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் அங்கு தவித்துவருகின்றனர்.இது குறித்து ஈடி.வி பாரத்திடம் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவி வெங்கட்ராமன் வித்யா நந்தினி கூறுகையில், "நான் 2015 ஆம் ஆண்டில் கிர்கிஸ்தானின் அஸ்மி பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ்., மருத்துவப் பாடப் பிரிவில் இணைந்தேன்.
இந்த ஆண்டுடன் எனது கல்லூரி படிப்பு நிறைவுறுகிறது. என்னுடன் தமிழ்நாடு, டெல்லி, ஆந்திரா, தெலங்கானா என இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் இங்குள்ள ஆறு மருத்துவ பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் வந்தே பாரத் மிஷன் மூலம் 330 மாணவர்கள் மட்டுமே இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். இன்னும் இங்கே பல மாணவர்கள் சிக்கித்தவித்து வருகிறோம். ஜூலை 2, 4 ஆகிய இரு தேதிகளில் கிர்கிஸ்தானில் இருந்து இந்தியர்களை தாயகம் அழைத்துச் செல்ல இரண்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.