தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நகராட்சி காய்கறி மொத்தம் மற்றும் சில்லறை வணிக வளாகம் தாராசுரம் பகுதியில் உள்ளது. கடந்த சனிக்கிழமை இங்குள்ள தேங்காய் வணிகர் ஒருவருக்கும், இங்கிருந்து காய்கறி வாங்கி வெளியே சில்லறை வணிகம் செய்யும் இரு நபர்களுக்கும் தொற்று உறுதியானது. இதையடுத்து காய்கறி அங்காடி உடனடியாக மூடப்பட்டதுடன் அதன் அருகேயுள்ள பிற வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன.
மேலும், அங்குள்ள வணிகர்கள், கடை ஊழியர்கள், சுமை தூக்குவோர் என 300 நபர்களுக்கு கடந்த இரு நாள்களாக கரோனா தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல்கட்டமாக 50 பேருக்காண முதற்கட்ட பரிசோதனை முடிவுகள் நேற்று காலை வெளியானதில், 20 பேருக்கு தொற்று உறுதியானது.
இதனையடுத்து நேற்று காய்கறி அங்காடியுடன் தொடர்புடைய மேலும் 300 நபர்களுக்காண மருத்துவ பரிசோதனை சிவகுருநாதன் பள்ளியில் நடைபெற்றது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், முதலில் காய்கறி அங்காடி பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் அருகே இரு அரசு மதுபான கடைகள் செயல்படுவதாக தெரிவித்ததையடுத்து அதனை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக மூட உத்தரவிட்டார்.