ஹைதராபாத்:ஒருங்கிணைந்த ஆந்திரமாநிலம் பிரிக்கப்பட்டு தெலங்கானா உருவானதில் இருந்து கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடத்தி வந்தது. சந்திரசேகர் ராவ் தேசிய அரசியிலில் ஈடுபடுவதற்காக கட்சியின் பெயரை பாரத ராஷ்டிரிய சமிதி என மாற்றம் செய்திருந்தார்.
ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா எனும் கட்சியை தொடங்கி தெலங்கானா அரசியலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தெலங்கானா மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆட்சியைத் தக்க வைக்க பிஆர்எஸ் கட்சியையும், ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பாஜக, ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியும் கோதாவில் இறங்கின.
இந்நிலையில், தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா பெறும் வாக்குகள் காங்கிரசின் வெற்றியை பாதிக்கும் எனவும், தேர்தலில் வெற்றி பெறுவதை விட சந்திரசேகர் ராவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் முக்கியம் எனவும் கூறி, எந்த நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக தேர்தல் நெருங்கிய சமயத்தில் ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளா தெரிவித்திருந்தார்.
ஒய்.எஸ்.ஷர்மிளாவின் இந்த திடீர் அறிவிப்பு காங்கிரசுக்கு சாதகமாக அமையும் என அரசியல் கூர்நோக்கர்கள் தெரிவித்தனர். மேலும், தென் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில், நவம்பர் 30ஆம் தேதி தெலங்கானா மாநிலத்தின் 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று இன்று (டிச.03) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னிலை பெற்று ஆட்சியைப் பிடிப்பது உறுதி ஆகிவிட்டது. இதனால் ஹாட்ரிக் ஆட்சியமைக்கும் கேசிஆரின் கனவிற்கு முட்டுகட்டை விழுந்தது.
முன்னதாக, நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானா மக்கள் கேசிஆருக்கு டாட்டா காட்டுவதாக (Telangana people say Bye Bye KCR) ஒரு ஸ்டிக்கர் ஒட்டிய ட்ராலி ஒன்றை வைத்திருந்தார். அப்போது பேசிய அவர், “கருத்துக் கணிப்புகள் உண்மையாகிவிடும். இது கே.சி.ஆர் மற்றும் பி.ஆர்.எஸ்ஸின் எதேச்சதிகார மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிரான வாக்கெடுப்பு. டிசம்பர் 3ஆம் தேதி தெலுங்கானாவுக்கு கே.சி.ஆரின் கொடுங்கோல் பிடியில் இருந்து விடுதலை அளிக்கும் நாளாக இருக்கும்.