கேரளா: பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (23) என்பவர் தனது நண்பர்களுடன் மலம்புழா பகுதியில் சேரடு, குரும்பாச்சி மலைக்கு மலையேற்றத்திற்காக சென்றுள்ளார். மலையேற்றத்தின்போது பாபுவுடன் சென்ற நண்பர்கள் இருவரும் பாதியிலேயே மலையேற்றத்திலிருந்து திரும்பிவிட்டனர்.
பாபு மட்டும் தொடர்ந்து மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி விழுந்து, மலை இடுக்கில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து தனது செல்போன் மூலமாக காவல் துறையினருக்கும், தனது நண்பர்களுக்கும், தான் மலை இடுக்கில் சிக்கிக்கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டரும் பயனிளிக்கவில்லை
பாபுவை மீட்க, தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாலக்காடு மாவட்ட ஆட்சியர் முருன்மாயி ஜோஷியின் கோரிக்கையை அடுத்து, கடலோரக் காவல் படையினரும் ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதிக்கு வந்தனர். ஆனால், மலை இடுக்குப் பகுதி தாழ்வாக இருக்கும் காரணத்தால் ஹெலிகாப்டர் கொண்டு மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது.
பின்னர், மீட்புப்படையினர் மலையின் மீது ஏறி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் இந்த முயற்சியும் தோல்வியடைந்தது. பின்னர், பாபுவுக்கு உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கினர். மாவட்ட ஆட்சியரும் சம்பந்தப்பட்ட அலுவலர்களும் சம்பவ இடத்தில் முகாமிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இளைஞரை மீட்க ராணுவத்தினரின் உதவியைக் கோரினார்.