ஜல்னா (மகாராஷ்டிரா):மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள தாரேகான் ஷிவாரா பகுதியில் திருடன் என நினைத்து அப்பாவி இளைஞரை ஒரு கும்பல் அடித்தே கொலை செய்துள்ளனர். உணவகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவரின் இரு சக்கர வாகனத்தை தனது வாகனம் என நினைத்து கவனக்குறைவாக எடுத்தச் சென்ற இளைஞர், அந்த வாகனத்தை வாகன உரிமையாளரிடம் ஒப்படைக்க வந்துள்ளார்.
ஆனால், அந்த வாகனத்தின் உரிமையாளர் அந்த இளைஞரை பைக் திருடன் என தவறாக நினைத்து தனது நண்பர்கள் உதவியுடன் அந்த இளைஞரை அடித்தே கொலை செய்துள்ளார். அந்த நேரத்தில் செல்போன் மூலம் தனது உறவினர்களை அழைத்து, தன்னை காப்பாற்றும்படி அந்த இளைஞர் கதறிய ஆடியோ கேட்போரை கதிகலங்கச் செய்துள்ளது.
பில்பூரியைச் சேர்ந்த சித்தார்த் மாண்டேல் என்ற இளைஞர், கடந்த ஆகஸ்ட் 26 அன்று மாலை அருகே உள்ள உணவகம் ஒன்றுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து வெளியே வந்த அவர், தனது வாகனம்போல் இருந்த மற்றொருவரின் இருசக்கர வாகனத்தைக் கவனக்குறைவாக எடுத்துச் சென்றுள்ளார்.
சிறிது தூரம் சென்ற பிறகு, அது தனது வாகனம் இல்லை என புரிந்து கொண்ட சித்தார்த் மாண்டேல், அந்த உணவகத்திற்கு அந்த இரு சக்கர வாகனத்தைத் திரும்பக் கொண்டு வந்துள்ளார். அப்போது அவரின் பின்னால் இருந்து, இருசக்கர வாகனங்களில் ஒரு கும்பல் துரத்திக் கொண்டு பின்தொடர்ந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சித்தார்த், அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், அந்தக் கும்பல் சித்தார்த்தை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். தொடர்ந்து, தான் எடுத்துச் சென்ற வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அவரின் நண்பர்கள்தான் என புரிந்த கொண்ட சித்தார்த், தனது பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துக்கூறி தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியுள்ளார்.
ஆனால், அதைக் கண்டுகொள்ளாத அந்த கும்பல், சித்தார்த்தை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அந்த நேரத்தில் தனது உறவினர்களை செல்போன் மூலம் அழைத்து தன்னை காப்பாற்றும்படி சித்தார்த் கதறியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உறவினர்கள் வருவதற்குள் அந்த கும்பல் சித்தார்த்தை அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சித்தார்த்தின் செல்போன் கால் ரெக்கார்டை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் கும்பலைச் சேர்ந்த கணேஷ் கைலாஷ் ஜாதவ், ஆகாஷ் அசோக் ஜாதவ், துல்ஷிராம் கெய்க்வாட் மற்றும் குண்ட்லிக் பகவான் திருக்கே ஆகியோரை தாரேகான் போலீசார் கைது செய்துள்ளனர். பைக் திருடர் என நினைத்து அப்பாவி இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:காதலியை பிரஷர் குக்கரால் தலையில் அடித்து கொலை செய்த இளைஞர்; பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!