கேஷ்பூர்: மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு, கேஷ்பூரில் உள்ள ஆனந்த்பூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி கர்ப்பமானார். சிறுமியை 22 வயதான பக்கத்து வீட்டு இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் காரணமாகவே அவர் கர்ப்பமானதாகவும் சிறுமியின் தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த குற்றச்சாட்டுகளை இளைஞர் திட்டவட்டமாக மறுத்தார்.
ஆனால், அப்பகுதியினர் கட்டப்பஞ்சாயத்து செய்து, சிறுமியைத் திருமணம் செய்து கொள்ளும்படி இளைஞரை வற்புறுத்தினர். இதையடுத்து பஞ்சாயத்திலேயே சிறுமிக்கு இளைஞர் தாலி கட்டினார். திருமணம் ஆனபோதும், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்காத இளைஞர், வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர், சிறுமியும், அவரது குடும்பத்தினரும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும், சிறுமியின் கர்ப்பத்திற்குத் தான் காரணமில்லை என்றும் மிட்னாபூர் நீதிமன்றத்தில் இளைஞர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தற்போது சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு 18 வயது ஆகிவிட்டது.
இந்த வழக்கு அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட்டது. அதன்படி, டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டதில், குழந்தையின் தந்தை குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, இளைஞர் மீது பழி சுமத்திய பெண்ணையும், அவரது தாயையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஆனந்த்பூர் காவல் நிலைய போலீஸார் அவர்களைக் கைது செய்யவில்லை.