பெங்களூரு: ‘டீப் ஃபேக்’ மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலியான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், காதலிக்க மறுத்ததற்காக இளம்பெண் மற்றும் அவரின் இரு நண்பர்களின் புகைப்படங்களை, நிர்வாண புகைப்படங்களாக எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், டீப்ஃபேக் மூலம் சாதாரண புகைப்படங்களை, நிர்வாண புகைப்படங்களாக எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய கர்நாடக மாநிலம் கானாபூரைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
‘டீப் ஃபேக்’ என்ற ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் மூலமாக போலியான வீடியோக்களும், புகைப்படங்களும் சமீப காலமாக இணையத்தில் பரவி வருகின்றன. அந்த வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலோடு பொருந்திய போலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, ‘டீப் ஃபேக்’ மூலம் நடிகை கத்ரீனா கைஃப்பின் போலி புகைப்படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளைஞர் ஒருவர், பெண் ஒருவரிடம் தான் காதலிப்பதாக கூறியுள்ளார். இவரின் காதலை அந்த பெண் ஏற்க மறுத்ததால், அவரையும் அவர் நண்பர்களையும் இளைஞர் மிரட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து, காதலிக்க மறுத்த பெண்ணின் பெயரில் சமூக ஊடகங்களில் போலி கணக்கை உருவாக்கி, காதலித்த பெண் மற்றும் அவரது நண்பர்களின் புகைப்படங்களை, டீப்ஃபேக் மூலமாக நிர்வாண புகைப்படங்களாக எடிட் செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.