புதுச்சேரி: ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி தலைவர் காத்தவராயனின் மகன் பிரகாஷ் என்பவருக்கும் திருபுவனை பகுதியை சார்ந்த அன்பரசி என்பவருக்கும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் வைத்து இன்று (ஆக 15) திருமணம் நடந்தது. மணமகன் பிரகாஷ் வேலூரில் உடற்கல்வி ஆசிரியராகவும், மணமகள் அன்பரசி புதுச்சேரி சேவா தள பொது செயலாளராகவும் உள்ளனர்.
நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ஆசையாக இருந்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் மாங்கல்யம் எடுத்து கொடுக்க, காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் முன்னிலையில், சுதந்திர தினத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்தை நடத்தி வைத்த நாராயணசாமி பேசுகையில், இது சுதந்திரம் அல்ல. இனி அடிமையாக போகிறார் என நகைச்சுவையாக கூறி சிரித்தார். மேலும் பேசிய அவர், மணமக்கள் கோயில் வேண்டாம் உங்களது வீட்டில் திருமணம் செய்து கொள்கிறோம் என்று கூறியதாகவும், தன்னுடைய வீடு காங்கிரஸ் அலுவலகம் தான் என்று சொல்லி, மணமக்களை காங்கிரஸ் அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் கூறினார்.
அவர்களுக்கு மிக எளிமையாக, மந்திரம் எதுவும் இல்லாமல் சோனியா காந்தி மற்றும் ராகும் காந்தி ஆகியோரின் பெயரை சொல்லி திருமணம் நடந்து உள்ளதாகவும், குறிப்பாக இந்திய வரலாற்றில் காங்கிரஸ் அலுவலகத்தில் திருமணம் நடந்தது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தார். மேலும் தன்னை பெண் வீட்டார் என்றும் வைத்திலிங்கம் மணமகன் வீட்டார் என்றும் நாராயணசாமி கூறினார்.