உத்தரகாண்ட் : இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யக் கோரி, பதங்களை கங்கை நதியில் வீச மல்யுத்த வீரர் வீராங்கனைகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தர் சாலையில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதிய நாடாளுமன்றம் கடந்த 28ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில்,தங்களுடைய புகார் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாஜக எம்பியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி புதிய நாடாளுமன்ற கட்டட வளாகத்தின் முன் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
திறப்பு விழா நாளில் நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது டெல்லி போலீசார் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்றனர். மேலும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது டெல்லி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யாவிட்டால், போட்டிகளில் வென்று குவித்த பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீச உள்ளதாகவும், இந்தியா கேட் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அறிவித்தார்.
பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யப்படாத நிலையில் மாலை 6 மணிக்கு கங்கை நதியில் பதக்கங்களை வீச உள்ளதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்தனர். இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாருக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சென்றனர்.
அங்கு, ஹர் கி பவுரி பகுதியில் கங்கை நதியின் முன் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் முன் திரண்டனர். கங்கை நதியின் முன் அமர்ந்த வீரர், வீராங்கனைகள் கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் பதக்கங்களை கையில் வைத்து பார்த்து கண்ணீர் விட்டு கதறினர். இந்நிலையில், இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்க முடியாது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
தேசிய நினைவுச் சின்னம் முன் அத்துமீறி போராட்டம் நடத்தினால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க :Wrestlers Protest: பதக்கங்களை கங்கையில் வீசிவிட்டு, சாகும்வரை உண்ணாவிரதம்: மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு!