ஹைதராபாத்: 'நீரின்றி அமையாது உலகு' என்று வள்ளுவன் கூறியது போல் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வின் முக்கிய காரணியாக அமைகிறது, தண்ணீர். மனித வாழ்வில் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான தண்ணீரை நாம் எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோம் என்பதில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும்.
அந்த வகையில், இன்று உலகெங்கும் தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது. தண்ணீர் நம்மை காப்பது போல், நாம் தண்ணீரை வீணடித்தல் மற்றும் மாசுபடுத்தாமல் அதனைப் பாதுகாக்க வேண்டும். இந்த உலகிலுள்ள ஒவ்வொரு தனிநபர், குடும்பங்கள், சமூகத்திலுள்ள இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தண்ணீரை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
மேலும் குடிதண்ணீர் முக்கியத்துவத்தையும் அன்றாட தட்டுப்பாட்டையும் இந்த விழிப்புணர்வு முன்வைக்கிறது. அன்றாட வாழ்வில் தண்ணீர் பயன்படுத்தாதோர் என யாரும் இல்லை. ஆய்வின் படி 2 பில்லியன் மக்கள்தொகையில் 4 பங்கில் ஒருவர் என சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் தேனாய் இனித்த தண்ணீர் இன்று பல கலப்படங்களாலும் வேதியியல் மாற்றங்களாலும் மாசு படுத்தப்பட்டுள்ளது. மேலும் குடிதண்ணீருக்கான தட்டுப்பாடும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத்தடுக்கும் நோக்கத்திலேயே உலகெங்கும் இன்று ''தண்ணீர் மற்றும் அதன் சுகாதார நெருக்கடி மாற்றம்'' என்ற தலைப்பில் இந்த விழிப்புணர்வு அனுசரிக்கப்படுகிறது.